ஈரோடு மாவட்டம், திங்களூர் அருகே உள்ள நல்லாம்பட்டி சிவியன்காடு பகுதியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (53). மரம் ஏறும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பார்வதி (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக வெள்ளிங்கிரிக்கு உடல் நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால், அவர் வாங்கியிருந்த கடன் திருப்பி செலுத்த முடியவில்லை என மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற வெள்ளிங்கிரி, தாசம்புதூர், கீழ்பவானி வாய்க்கால் வலது கரையோரம் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று வெள்ளிங்கிரியை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே வெள்ளிங்கிரி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, திங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.