ஜெயங்கொண்டம் அருகே சாலை இரும்பு தடுப்பில் மோதி உருண்ட காரில் பயணித்த 10 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.* அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் காலனித் தெரு ஜெயராமன் மகன் துளசிராமன் (23), மற்றும் அதே ஊரை சேர்ந்த வேலாயுதம் மகன் அன்புமணி (23) ரமேஷ் மகன் தனுஷ் (20) பெரியகிருஷ்ணாபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த ராயப்பன் மகன் ராகவன் (24) தியாகராஜன் மகன் சந்தானராஜன் (21), (கார் ஓட்டுநர்) ரெட்டி தத்தூர் காலனி தெரு செபஸ்டியான் (20), திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் குமரவேல் (26) கருப்பண்ணசாமி மகன் சிவரஞ்சித் (19), அரவிந்த் (19), திருகளப்பூர் புதுக் காலனி தெருவை சேர்ந்த பாலு மகன் அறிவழகன் (19) உள்ளிட்ட பத்து பேரும் இன்று ஒரு காரில் ஜெயங்கொண்டம் வந்து விட்டு மீண்டும் சொந்த ஊரான பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு செல்வதற்காக ஆண்டிமடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை செபஸ்தியான் என்பவர் ஒட்டிச் சென்றுள்ளார். காரில் அனைவரும் கூவத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இரும்பு தடுப்பில் மோதி கவிழ்ந்து உருண்டோடியது. இதில் காரில் பயணித்த துளசிராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த அறிவழகன் மேல் சிகிச்சைக்காக வெளியூர் கொண்டு செல்லப்பட்டார். இதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய 8 பேரும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆண்டிமடம் போலீசார் . இறந்து போன துளசிராமனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணமான ஒரே வருடத்தில் இறந்து போன துளசிராமனின் மனைவி பிரியதர்ஷினி கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.