நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளை சந்தித்து கலெக்டர் பிருந்தாதேவி நலம் விசாரித்தார்.
சேலம் 4 ரோட்டில் உள்ள கே.என்.ராவ் மருத்துவமனைக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு விடுதியில் தங்கி படிக்கும் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் உடனடியாக 4 ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மாணவிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 20 மாணவிகளும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்து அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, அங்கு சிகிச்சை பெற்று வரும் நர்சிங் மாணவிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவர் வாந்தி மயக்கம் காரணமாக மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆஸ்பத்திரி டீன் மணியிடம் கேட்டறிந்தார். மேலும், டாக்டர்கள் தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தினார். அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் உள்ளிட்ட டாக்டர்கள் உடனிருந்தனர்.