காணை அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
காணை அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள தெளி கிராமத்தில், தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்து அதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டது.இதையறிந்ததும் அக்கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி திடீர் போராட்டம் செய்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை போலீசார் அங்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு செல்போன் கோபுரம் அமைந்தால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக் கும் பலவித நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று முறையிட்டனர்.
இதைக்கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உரிய முறையில் கோரிக்கை மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.