இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கைது - வாகனங்கள் பறிமுதல்
கீரனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வீரப்பட்டி மேட்டுக்களத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது இருசக்கர வாகனத் கீரனூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்திச்சென்றபோது திருடு போனதாகவும், அகரப்பட்டி பெருங்காபட்டியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவில் அருகே நிறுத்திச் சென்றபோது திருடுபோனதாகவும், கிள்ளுக்கோட்டை வட்ட கிராம நிர்வாக அலுவலர் கோபிபாண்டி என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கீரனூர் ரயில் நிலையத்தில் நிறுத்திச் சென்றபோது திருடுபோனதாகவும் கடந்த இரு மாதங்களில் காவல் நிலையங்களில் புகார்அளிக்கப்பட்டிருந்தது.
இவற்றைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் மார்ட்டின்ராஜ் தலைமையில் 4 காவலர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினர், திங்கள்கிழமை கிள்ளுக்கோட்டை சாலையிலுள்ள ரயில்வே கேட் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த குளத்தூர் வட்டம் ஆயிப்பட்டியைச் சேர்ந்த நாகமுத்து மகன் ராஜீவ் (39)என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் மேற்குறிப்பிட்ட 3 இருசக்கர வாகனங்களையும் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, கீரனூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.