2-ம் நிலை காவலர் பணிக்கு உடல் திறன் தேர்வு

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கு நடந்த உடல் திறன் தேர்வில் 248 பேர் பங்கேற்றனர். 2ம் கட்ட தேர்வு இன்று நடக்கிறது

Update: 2024-02-09 02:14 GMT
நீளம் தாண்டுதல் 
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், சீருடை பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஏற்கனவே நடைபெற்றது. இதில் 822 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களில் 304 பேருக்கு முதற்கட்டமாக உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. அதில் 251 பேர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு உடல் திறன் தேர்வு நேற்று சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் 248 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கயிறு ஏறுதல் மற்றும் ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் போன்ற திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் உடல் திறன் தேர்வை பார்வையிட்டனர். இது குறித்து போலீசார் கூறும் போது, ‘2-ம் நிலை காவலர் பணிக்கான உடல் திறன் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். பின்னர் மதிப்பெண்கள் அடிப்படையில் காவலர் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். 2-ம் கட்டமாக உடல் தகுதி தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் 402 பேர் கலந்து கொள்ள உள்ளனர்’ என்றார்கள்.
Tags:    

Similar News