பஸ்ஸில் பிக்பாக்கெட் - தாய், மகள் கைது
விழுப்புரம் அருகே பேருந்தில் ஜேப்படி திருட்டில் ஈடுபட்ட தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே கோலியனூர் பனங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் தமிழ்பிரியன் (வயது 30). இவர் தினந்தோறும் திண்டிவனம் வந்து, ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதி பஸ் நிறுத்தத்தில் குடிநீர் பாட்டில், பலாசுளை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழ்பிரியன் வழக்கம்போல் மேம்பாலத்தின் கீழ் பகுதி பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றில் ஏறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் நின்ற இளம்பெண் ஒருவர் தமிழ்பிரியன் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.500-ஐ ஜேப்படி செய்து, அருகில் நின்ற மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார்.
இதை பார்த்துவிட்ட தமிழ்பிரியன் பயணிகள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் மடக்கி பிடித்து திண்டிவனம் போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட பெண்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நாமக்கல் மாவட்டம் வலையப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த சூர்யா மனைவி மவுலியா (வயது 22) மற்றும் அவரது தாயார் அலமேலு(40) என்பதும் பணத்தை ஜேப்படி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மவுலியா, அலமேலு ஆகியோரை கைது செய்தனர். கைதான தாய், மகள் இருவர் மீதும் கடலூர், விருத்தாசலம், சேலம், முசிறி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதி போலீஸ் நிலையங் களில் ஜேப்படி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.