பிக்மி இணையதள வழியில் கர்ப்ப பதிவு எண் பெறலாம் : ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் தாங்களாகவே சுயமாக பிக்மி இணையதள வழியில் பதிவு செய்து கர்ப்ப பதிவு எண் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இணையதளத்தில் கர்ப்பிணிகள் சுயமாகவே தங்களது கர்ப்பத்தினை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறையின் படி, ஒவ்வொரு கர்ப்பிணிகளும் கர்ப்பத்தை பதிவு செய்து பிக்மி எண் (PICME NUMBER) பெறுவது அவசியமாகும். கர்ப்பிணி பெண்கள் தாங்களாகவே சுயமாக பிக்மி இணையதள வழியில் கர்ப்ப பதிவு எண் (RCH ID) பெறுவதற்கு https:/Picme3.tn.gov.in/ என்ற மின்னஞ்சல் முகவரியில், தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (ழுவுP) பதிவு செய்து தங்களது சுய விவரங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை விவரங்களை உள்ளீடு செய்து ஆர்.சி.எச்.ஐ.டி-யினை (RCH ID) குறுந்தகவலில் பெறலாம்.
அதேபோல டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்கும் https:/Picme3.tn.gov.in/ என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம். குழந்தையின் பிறப்பு சான்று பதிவு மற்றும் மகப்பேறு நிதிஉதவி பெற கர்ப்ப பதிவு எண் (RCH ID) அவசியம். பதிவினை மேற்கொள்ள கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும். கர்ப்பிணியின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் கர்ப்ப பதிவை உறுதி செய்வதற்கான OTP எண்ணை பெறுவதற்கு, கர்ப்பிணியின் ஆதார் எண், பெயர் மற்றும் வயது ஆதாரில் உள்ளபடி இருக்கவேண்டும். கணவரின் பெயர், வயது, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் திருமணதேதி (தாய் தெரிவிக்க விரும்பவில்லை என்றால், காலியாக விடவும்), பின்கோடுடன் குடியிருப்பு முழு முகவரி (கர்ப்பிணித்தாய் கடந்த 6 மாதங்களில் வசிக்கும் முகவரி / இனி தொடர்ந்து வசிக்க இருக்கும் முகவரி) ஆகிய தகவல்களை சரியாக உள்ளீடவும். தற்போதைய கர்ப்பத்திற்கான குழந்தையின் தந்தை, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கணவரின் பெயரிலிருந்து மாற்றப்படலாம்.
(மறுமணம் / விவாகரத்து / விதவை / பிரிந்தவர்கள் / திருமணமாகதவர்கள் / மற்றவர்கள் - குறிப்பிடவும்). மருத்துவ பதிவுகளான, கடைசி மாதவிடாய் தேதி (LMP) முந்தைய-கர்ப்பம், பிரசவம், கருகலைப்பு விவரங்கள், இந்த கர்ப்பத்திற்கு முன் உயிருடன் இருக்கும் குழந்தையின் எண்ணிக்கை, கர்ப்பிணித்தாய் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் பெயர் மற்றும் இடம், ஏதேனும் மருந்தினை தொடர்ந்து உட்கொள்கிறார்களா? என்ற விபரம், பிரசவம் பார்க்க திட்டமிட்டுள்ள மருத்துவமனை மற்றும் ஊர் ஆகிய தகவல்களை சரியாக அளிக்க வேண்டும். பதிவின் போது கர்ப்பிணியின் ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்யவேண்டும். பின்னர் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட மருத்துவரின் முத்திரையுடன் கையொப்பமிட்ட அறிக்கையை பதிவேற்றம் செய்யவேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை சரியாக பதிவேற்றம் செய்வதன் மூலம் ஆர்.சி.எச்.ஐ.டி-யினை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.