உத்திரமேரூரில் ரூ.99 லட்சத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பு
சமூக நீதி நிதியின் கீழ், 99 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில், உத்திரமேரூரில் இருந்து, காஞ்சிபுரம் செல்லும் சாலையில், கேதாரீஸ்வரர் கோவில் தெரு உள்ளது. இத்தெருவில், மழைநீர் வடிகால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இதுவரை இல்லாததால், மழைக்காலங்களில் அப்பகுதிவாசிகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால், இத்தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து பேரூராட்சி கூட்டங்களிலும் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கேதாரீஸ்வரர் கோவில் தெரு மற்றும் பெரிய நாரசம்பேட்டை தெருவில் மழைநீர் வடிகால்வாய் ஏற்படுத்தவும், 10 இடங்களில் சிறுபாலங்கள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதற்காக சமூக நீதி நிதியின் கீழ், 99 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட கால கோரிக்கை நிறைவேறி உள்ளதால், அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.