ராசிபுரம் : ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் பைரவாஷ்டமி பூஜை
கால பைரவர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தரமசம்வர்த்தினி உடனமர் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு கார்த்திகை மாத பைரவாஷ்டமி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அபிஷேக அலங்கார பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். முன்னதாக கோவிலில் அதிகாலை வினாயகர் பூஜையும், தொடர்ந்து புண்யாக வாசனை, பஞ்சகவ்யம், ஏகாதச ருத்ரபாராயணம், ருத்ர ஹோம குண்ட பூஜைகள் போன்றவை நடைபெற்றன. யாகபூஜையில் கருமாபுரம் சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில், கல்லங்குளம் அழகிய சிற்றம்ப குருசாமிகள் மடம் கே.உமாபதி சிவம், கே.தட்சிணாமூர்த்தி சிவம், ஸ்ரீமது தில்லைநாத சிவம் உள்ளிட்ட 11 சிவாச்சாரியார்கள் பங்கேற்று வேதமந்திரங்கள் முழங்க யாகவேள்விகள் நடத்தினர்.
பின்னர் கோவிலில் பால்,தயிர், திருமஞ்சனம்,சந்தனம், பன்னீர், திருநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 11 வகையான மங்கள வாசனை திரவியங்களை கொண்டு ஏகா தச ருத்ரா அபிஷேகம் நடத்தப்பட்டது.இந்த அபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினர். கால பைராஷ்டமி பூஜையின் கட்டளைதாரர்கள் என்.ஆர்.சங்கர், நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். சிறப்பு பூஜையில் தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், ராசிபுரம் டிஎஸ்பி., டி.கே.கே.செந்தில்குமார், ஆய்வாளர் கே.சுகவனம் உள்ளிட்ட பக்தர்கள் திரளானோர் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினர்.