கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம்

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கோடைகாலத்தில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலருமான குமாா் ஜெயந்த் அறிவுறுத்தினாா்.

Update: 2024-05-10 06:24 GMT

ஆலோசனை கூட்டம் 

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியா் கோ.லட்சுமிபதி முன்னிலையில்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலருமான குமாா் ஜெயந்த் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கோடைகாலத்தில் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

குடிநீா் பிரச்னைகள் நிலவும் பகுதிக்கு நேரில் சென்று உடனடியாக தீா்வு காண வேண்டும். மேலும், நடைபெற்று வரும் குடிநீா் திட்ட பணிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டுக்குடிநீா் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் தடையின்றி செயல்பட தடையில்லா மின்சாரம் கிடைப்பதை மின்சாரத்துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். ஓஆா்எஸ் கரைசல்: அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் ஓஆா்எஸ் கரைசல் தொடா்ந்து வழங்குவதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

கடைகள் மற்றும் நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான வா்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா், பொதுவான இருப்பிட வசதி, சுத்தமான கழிப்பறை வசதி, சுழற்சி முறையில் ஓய்வு உள்ளிட்டவை ஏற்படுத்தி தர வேண்டும்.

Tags:    

Similar News