தீயினால் வீடிழந்து தவித்த மூதாட்டிக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி
தீயினால் வீடிழந்து தவித்த மூதாட்டிக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி புஷ்பவள்ளி (75), இவரது பேத்தி யாழினி (16) பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு வேறு ஆதரவு இல்லை. மூதாட்டி கூலி வேலைக்கு சென்றும், தனக்கு கிடைக்கும் முதியோர் ஓய்வூதிய தொகை மூலமும் குடும்பம் நடத்தி வருகிறார்.
இவர் அதே பகுதியில் உள்ள தனி நபர் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் குடிசை வீட்டில் குடியிருந்து வந்தார். இந்நிலையில், பேத்தி யாழினி பள்ளிக்கு சென்றுள்ளார். மூதாட்டி வேலைக்காக வெளியே சென்று விட்டார். அப்போது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பலானது. ரூபாய் பத்தாயிரம் ரொக்கப்பணம், ஒரு பவுன் தங்க நகை, வெள்ளிக் கொலுசு மற்றும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவையும் தீயில் எரிந்து நாசமானது.
செய்வதறியாது மூதாட்டி கலங்கி நின்றார். இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக விவசாயிகள் அணி மாநில இணைச்செயலாளருமான மா.கோவிந்தராசு அறிவுறுத்தலின் பேரில், அவரது மகனும் பேராவூரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான கோவி. இளங்கோ நேரில் சென்று மூதாட்டிக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5000 ரொக்கப் பணம் மற்றும் அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார். மேலும் உடன் இருந்த அதிமுக நிர்வாகிகள் ரூ.3000 மூதாட்டிக்கு வழங்கினர்.
அப்போது சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அருணாசலம், பேராவூரணி தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி கோ.ப.ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சத்யராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆர்.கே.சிவா, பேராவூரணி நகர தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அருள் சல்வம் ,முடச்சிக்காடு ரவி ஆகியோர் உடன் இருந்தனர். உதவியைப் பெற்றுக் கொண்ட மூதாட்டி புஷ்பவள்ளி அதிமுக நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.