சேந்தமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை
சேந்தமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்வே பாதை உள்ளது. இதன் வழியாகத்தான் செங்கல்பட்டு, அரக்கோணம், காஞ்சீபுரம், சென்னை, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் செல்கிறது.
ரயில்கள் செல்லும்போது சேந்தமங்கலத்தில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவதால் சயனபுரம், நெமிலி, ஆட்டுப்பாக்கம், கீழ்வீதி, சிறுணமல்லி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். அவசர காலங்களில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவை குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சேந்தமங்கலம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனர்.
அவர்கள் அறுவடை காலங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை டிராக்டர், லாரிகளில் ஏற்றி காஞ்சீபுரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது ரயில்வே கேட் மேல் உள்ள இரும்பு தடுப்புகளில் சிக்கி வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை எந்தவித கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை.ஆகவே,பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி சேந்தமங்கலத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.