பொங்கல் பரிசுத் தொகுப்போடு தமிழ் நாள்காட்டியையும் வழங்க கோரிக்கை
பொங்கல் பரிசுத் தொகுப்போடு தமிழ் நாள்காட்டியையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழ் நாள்காட்டி 25 வது ஆண்டு வெளியீட்டின் அறிமுக விழா, தமிழ் இலக்கியத் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா, திருக்குறள் சாதனை சிறுவனுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் பொறுப்பாளர் அ.செ. சிவக்குமார் தலைமை வகித்தார். தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வில் வென்ற மாணவிகள் ரமாதேவி, பிரியதர்ஷினி, சரஸ்வதி, தமிழ்ச்செல்வி மற்றும் திருக்குறள் சாதனைச் சிறுவன் சாதவ் ஆகியோர் நிகழ்வில் பாராட்டப் பெற்றனர்.
தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ.சி. சின்னப்பத்தமிழர் தமிழ் நாள்காட்டியை அறிமுகம் செய்து உரையாற்றினார். திராவிட விடுதலைக் கழக பொறுப்பாளர் பால் பிரபாகரன், திருக்குறள் பேரவை பொறுப்பாளர் ஹெச்.சம்சுதீன், கல்வியாளர் கே.வி.கிருஷ்ணன், திராவிடர் கழக பொறுப்பாளர் அரு. நல்லதம்பி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சேக் இப்ராம்சா, தமிழக மக்கள் புரட்சிக் கழக பொறுப்பாளர் வீரக்குடி ராசா, சமூக செயற்பாட்டாளர் இரா. ராம்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் பாரதி வை. நடராசன் மற்றும் கவிஞர் துறையூர் வீ.சோமசுந்தரம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் சண்முகப்பிரியா, பேராசிரியர் மணிகண்டன், ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன், காஜா முகைதீன், சிலம்பரசன், சி மோகன், வெ.சிவக்குமார், திருவள்ளுவர் போட்டித் தேர்வு பயிற்சி மைய ஆசிரியர் ரெ சந்தோஷ், பொறியாளர் டி.ஆர்.முருகேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்வில், திருவள்ளுவர் ஆண்டு தமிழ் நாள்காட்டியை தமிழ்நாடு அரசு அங்கீகரித்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும்,
பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் தமிழ் நாள்காட்டியையும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. நிகழ்வில் திருவள்ளுவர் போட்டித் தேர்வு பயிற்சி மைய மாணவிகள், பாரதி மகளிர் தையல் பயிற்சி மைய மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மெய்ச்சுடர் நா. வெங்கடேசன் வரவேற்றார். நிறைவாக த.பழனிவேல் நன்றி கூறினார்.