ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அகவிலைப்படியை உயர்த்தகோரி ஓய்வு பெற்றோர் காத்திருப்பு போராட்டம்
Update: 2023-12-06 04:21 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனை நுழைவாயில் முன்பு, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் அகவிலைப்படியை உயர்த்தகோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஓய்வு பெற்ற சங்க செயலாளர் ரங்கன் தலைமை வகித்தார். இதில் கடந்த எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி வழங்கிட கோரியும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர்நீதிமன்றம் பிறப்பித்த 46 சதவீத அகவிலைப்படியை வழங்கிட கோரியும், முன்னாள் போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மேலும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுடன் இணைந்து, வரும் 19 ம் தேதி முதல், வேலை நிறுத்த போராட்டம் தேதி அறிவிக்கப்படும் என காத்திருப்பு போராட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர். இந்த நிகழ்வில் அண்ணாமலை, தமிழ்மணி, தவமணி,இளங்கோ,கந்தசாமி, முனிராஜ், சண்முகம், செல்வராஜ், கங்காதரன், சம்பத், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.