லாரி மீது வேன் மோதி விபத்து - தொழிலதிபர் பலி, 11 பேர் காயம்
கயத்தாறு அருகே நாற்கர சாலையில் முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலதிபர் உயிரிழந்தார். பெண்கள் உட்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
திருநெல்வேலி மேல ரத வீதியைச் சேர்ந்தவர் வீரப்பன் (76). இவர் நெல்லையில் பாத்திரக் கடைகள் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அறந்தாங்கி அருகே உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு, மீண்டும் திருநெல்வேலிக்கு வேனில் குடும்பத்தோடு வந்து கொண்டிருந்தார். நேற்று பிற்பகல் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கரசாலையில் வரும்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த வீரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் வேனை ஓட்டி வந்த மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த வைகுண்டம் மகன் மாரியப்பன் (46), பாலகிருஷ்ணன் (26), ஆதவன் (55), ராஜாகாந்தி (72), ராஜா வீரப்பன் (18), சீதாலட்சுமி (48), மங்கையர்கரசி (24), சூரிய விக்ரம் (21) உட்பட 11பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.