வேளாண் அதிகாரி வீட்டில் வெள்ளி பொருட்கள் கொள்ளை
இறச்சகுளத்தில் ஒய்வு பெற்ற வேளாண் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (65). ஓய்வு பெற்ற வேளாண் துறை அதிகாரி. இவரது மனைவி பொன்னு என்பவர் சுகாதார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உறவினரை பார்க்க இருவரும் அபுதாபி சென்றுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் வீட்டில் வேலை செய்யும் சுகன்யா (49) நேற்று காலை சராமன் வீட்டுக்கு சென்று பார்த்த போது, கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராமனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த வெள்ளி தட்டுகள், குத்துவிளக்கு உட்பட பல பொருட்கள் மாயமாகி இருந்தன.இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீட்டில் தங்க நகைகள் எதுவும் வைக்கவில்லை என தெரிகிறது. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டி சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.