திறக்கப்பட்ட பள்ளிகள் - வழங்கப்பட்ட 3-ம் பருவ பாடப்புத்தகங்கள்
சேலத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி தொடங்கப்பட்டது. மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் இந்த தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டன. இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அதேபோல் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.
இதையொட்டி பல மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சிலர் பெற்றோருடன் சுற்றுலா இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று காலை வழக்கம்போல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. முன்னதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி பள்ளிகளில் பராமரிப்பு பணிகளும், தூய்மை பணிகளும் நடைபெற்றன. பள்ளிகள் திறப்பையொட்டி காலை முதலே மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
இதையடுத்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கினர். விடுமுறையையொட்டி முன்னதாகவே அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.