காவலாளி சாவில் திடீர் திருப்பம் - வெட்டிக் கொலை செய்தது அம்பலம்

கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவிலில் காவலாளி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

Update: 2024-04-14 12:23 GMT

கொலை 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (65). இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 10-ம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு வரும் நேரம் நாக்கால்மடம் அருகே கீழே விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதற்கிடையில் சிறிது நேரத்தில் பிரபாகரன் உயிரிழந்தார்.

இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிரபாகரன் மகன் அனீஸ் குமார் அளித்த புகாரின் பேரில் வலிப்பு வந்து கீழே விழுந்து பிரபாகரன் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் பிரபாகரன் கழுத்தில் மூன்று ஆழமான வெட்டு காயங்களும், தலையில் வெட்டுக் காயம் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சுசீந்திரம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

பிரபாகரன் விழுந்து கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்தபோது, பிரபாகரனை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வெட்டி கீழே தள்ளியதும், பிரபாகரன் துடிதுடித்து விழுந்து பின்னர் எழுந்து அமரும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. இதை பார்த்த போலீசார் பிரபாகரன் இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News