ரெயில் பயணிகளிடம் தொடர் திருட்டு - ஒடிசா வாலிபர் கைது
சேலத்தில் ரெயில் பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஒடிசா வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 24 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
சேலம் பழைய சூரமங்கலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் மணிவேல். இவர், நேற்று அதிகாலை 2.50 மணிக்கு ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்த மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இறங்கி நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசில் மணிவேல் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். இந்நிலையில், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் எதிரில் பிரபல ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்த வட மாநிலததை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பினட் நாயக் (வயது 33) என்பதும், அவர் கோவை, ஈரோடு, மயிலாடுதுறை, தூத்துக்குடி ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் ரெயில்களில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 24 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.