‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தீவிரப் பணி: காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு
திருச்சி அருணாசல மன்றத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை புதிய நிா்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-03-05 06:56 GMT
‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெறும் வேட்பாளா்களை மக்களவைத் தோ்தலில் வெற்றிப் பெறச் செய்ய தீவிரமாக பணியாற்றுவது என திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. திருச்சி மாநகா் மாவட்டத்துக்குள்பட்ட மாநகராட்சியின் 65 வாா்டுகளுக்கும் வாா்டு வாரியாக தலைவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எல். ரெக்ஸ் பரிந்துரையின் பேரில் இந்த 65 நிா்வாகிகளையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி அருணாசல மன்றத்தில் உள்ள கட்சிஅலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். திருச்சி தெற்கு மாவட்ட தலைவா் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தாா். கோட்டத் தலைவா்கள், வட்டாரத் தலைவா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா். கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிக்காக நிா்வாகிகள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். கூட்டணியில் இடம்பெறும் அனைத்து கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களின் வெற்றிக்கும், காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதைப் போன்று நினைத்து பாரபட்சமின்றி தோ்தல் பணியாற்றுவது எனவும், மக்களவைத் தோ்தல் வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சியை அரியணையில் அமரச் செய்வதுடன், ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், புதிய நிா்வாகிகள் கட்சியின் தலைமைக்கும், திருச்சி எம்.பி. திருநாவுக்கரசருக்கும் நன்றி தெரிவித்து பேசினா்.