தை கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
தை மாதம் கார்த்திகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை அருகில் பிரசித்தி பெற்ற வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு காலை 8 மணிக்கு முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், நெய், சந்தனம், விபூதி உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய் யப்பட்டது. பின்னர் காலை 11 மணியளவில் சாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் முத்தாம்பாளையத்தில் உள்ள கதிர்வேல் முருகன் கோவிலிலும் தை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் கதிர்வேல் முருகனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர், இதேபோல் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பீமநாயக்கன் தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமிக் கும், பூந்தோட்டம், கீழ்வன்னியர் தெரு முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கும், ரெயிலடி முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான், செல்லியம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கும் தை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.