தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என தாயார் கண்டிப்பு: மாணவி தற்கொலை
தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என தாயார் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை கீழராஜ வீதியை சேர்ந்தவர் நிர்மலா(வயது 38). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இதில் இளைய மகளான பூஜா (16), தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். தற்போது தேர்வு நடந்து வரும் நிலையில் பூஜா தொல் காப்பியர் சதுக்கம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தாள்.
பூஜாவை தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என கூறி தாயார் நிர்மலா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த பூஜா நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். தகவலறிந்த தாயார் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பூஜாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியினரிடயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.