மாதிரி இதயத்தை கொண்டு அண்ணா உருவத்தை வரைந்த ஆசிரியர்
கள்ளகுறிச்சி மாவட்டம்,சிவனார்தாங்கல் பகுதியை சேர்ந்த ஓவிய ஆசிரியர் மாதிரி இதயத்தை வைத்து அண்ணா உருவப்படத்தை வரைந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் விதமாக, அண்ணாவின் 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்ற பொன்மொழிக்கு ஏற்ப "மாதிரி இதயத்தாலேயே" அறிஞர் அண்ணாவின் உருவத்தை வரைந்தார்.
அறிஞர் அண்ணா என அன்போடு அழைக்கப்படும் முன்னாள் தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்கள் பள்ளி ஆசிரியராக பணியை தொடங்கி பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக, நாடாளுமன்ற உறுப்பினராக, முதலமைச்சராக பதவி வகித்து நவீன தமிழ்நாட்டை செதுக்கியவர்.
அண்ணா அவர்கள் மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார், தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன் மிக நாகரிகமான முறையில் அனைவரையும் கவர்கின்ற வகையில் கரகரத்து குரல் வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். தமிழுக்காக அரும்பணியாற்றிய அண்ணா அவர்கள் தான் முதலமைச்சர் பதவி வகித்த பின்னர் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றம் செய்தார்,
அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் விதமாக, அண்ணா அவர்களே சொன்ன 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்ற பொன்மொழிக்கு ஏற்றார்போல் மாதிரி இதயத்தை கொண்டு அதை நீர் வண்ணத்தில் தொட்டு அறிஞர் அண்ணா உருவத்தை மாதிரி "இதயத்தாலேயே" ஐந்து நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்ட அண்ணா உருவத்தை மாதிரி இதயம் கொண்டு வரைந்தது புதுமையான சிந்தனை என்று ஓவிய ஆசிரியர் செல்வத்தை பாராட்டினார்கள்.