வித்தியாசமாக எழுதப்பட்டுள்ள வாசகம்!
திருப்பூரில் ஐயா மாற்றுத்திறனாளி வாகனம் திருடி விடாதீர்கள் என வாகனத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Update: 2024-05-07 13:04 GMT
ஐயா மாற்றுத்திறனாளி வாகனம் திருடி விடாதீர்கள் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் கவனத்தை ஈர்த்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பல்லடம் சாலையில் 7 தளங்களுடன் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல்வேறு அரசு துறைகள் இங்கே செயல்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தூய்மை பணியாளரின் இருசக்கர வாகனம் திருடப்பட்ட நிலையில் ஒரு வாரம் கழித்து அது கொடுமுடியில் மீட்கப்பட்டது. இங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டிவிஎஸ் வாகனம் ஒன்றில் ஐயா மாற்றுத்திறனாளி வாகனம் திருடி விடாதீர்கள் என நம்பர் பிளேட்டில் எழுதி வைத்துள்ள வாசகம் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அருகாமையிலேயே மாவட்ட தகவல் கண்காணிப்பாளர் அலுவலகம் , நீதிமன்றம் உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தில் இதுபோன்று எழுதப்பட்டுள்ள சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.