சேலம் கோட்டையில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கேட்டு சேலம் கோட்டையில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் கோட்டை ஸ்டேட் பேங்க் முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மத்திய தொழில் சங்கத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் வங்கி ஊழியர்கள், காப்பீட்டு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் அணிவகுத்து நீன்றது. இதனால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது . போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து சி.ஐ.டி.யு. மாநில துணை பொது செயலாளர் திருச்செல்வம் கூறுகையில்:- மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து மத்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இதனை கண்டிதது இந்த மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது என்றார். இந்த போராட்டத்தில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு சி.ஐ.என்.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.