தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் : 599பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 316 பெண்கள் உட்பட 599பேர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 30 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், துறைமுகம், ரயில், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி தூத்துக்குடியில் ஐஎன்டியூசி, சிஐடியூ, தொமுச, ஏயூடியூசி, எச்எம்எஸ், உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது. எட்டையபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலை, பாரத் பெட்ரோலியம், அரசு போக்குவரத்து, விரைவு போக்குவரத்து, மின்சார வாரியம், தூத்துக்குடி அனல் மின்நிலையம், என்.டி.பி.எல்., அனல்மின் நிலையம் ஆகிய நிறுவனங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் சார்பில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு ஐஎன்டியூசி மாநில மூத்த தலைவர் கதிர்வேல், சிஐடியூ மாநில துணைத் தலைவர் மகாலெட்சுமி, தொமுச மாவட்ட செயலாளர் சுசி ரவீந்திரன், எச்எம்எஸ் மாநில தலைவர் ராஜ்குமார், முறைசாரா ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ராஜலெட்சுமி, ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் பாலசிங்கம், ஏஐசிசிடியூ மாவட்டச் செயலாளர் சிவராமன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
இதில் கலந்து காெண்ட 85 பெண்கள் உட்பட 225பேரை மத்திய பாகம் போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டியில் சாலை மறியில் ஈடுபட்ட 120 பெண்கள் உட்பட 174 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் திருச்செந்தூரில் சாலை மறியில் ஈடுபட்ட திருச்செந்தூரில் மறியலில் ஈடுபட்ட 130 பெண்கள் உட்பட 215பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 316 பெண்கள் உட்பட 599பேர் கைது செய்யப்பட்டனர்.