வீரபாண்டி திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா
அரகண்டநல்லூர் அருகே வீரபாண்டியில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில்தேர் திருவிழா இன்று நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த வீர பாண்டி கிராமத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சித்திரை அக்னி வசந்தோற்சவ தேர் தூக்குதல் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 12- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் அர்ஜூனன் வில்வளைத்தல் நிகழ்ச்சி, அம்மன் திருக்கல்யாணம் மற்றும் இரவு வீதி உலா வும் நடந்தது. நேற்று முன்தினம் முத்து பல்லுக்கு வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கரகத் திருவிழா மற்றும் திருத்தேர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்களால் 10 டன் எடை கொண்ட தேரை தூக்கிச் செல்லப்படும் பிரமாண்டமான தேர்த்திருவிழா மற்றும் தீமிதி திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.