நகை திருட்டு வழக்கில் வாலிபரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
சேலத்தில் வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் சிறையில் உள்ள வாலிபரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பி.எம். நகரை சேர்ந்தவர் ஹசீனா பானு. தர்மபுரியில் மீன்வளத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 23-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். மீண்டும் 30-ந் தேதி திரும்பி வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 26 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கருங்கல்பட்டியைச் சேர்ந்த அப்பு (34) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் போலீசார் அவரை, ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் 4 பவுன் நகையை அடகு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நகையை மீட்ட போலீசார், அப்புவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.