நகர்ப்புற வாழ்விட வாரிய குடியிருப்புகளில் வாடகைக்கு விட்டு மோசடி: ஊழியர் கைது
கிரைம்
தஞ்சாவூர் அருகே நகர்ப்புற வாழ்விட வாரிய குடியிருப்புகளில் வாடகைக்கு விட்டு மோசடி செய்த ஊழியரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில், கியூ மற்றும் டி வளாகத்தில் காலியாகவுள்ள வீடுகளில் சிலருக்கு மோசடியாக வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதன் பேரில் வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் மொகைதீன் அப்துல் காதர் விசாரணை மேற்கொண்டார். இதில், இந்தக் குடியிருப்புகளில் பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றும் சிந்தாமணி குடியிருப்பைச் சேர்ந்த ஜி. திருவள்ளுவன் (57) மோசடியாக தலா ரூ. 1,000 வாடகை வசூலித்து 10 பேருக்கு வாடகைக்கு விட்டு வந்தது தெரிய வந்தது. இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் மொகைதீன் அப்துல் காதர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து திருவள்ளுவனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.