கிழக்கு தொகுதி காலி
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியும் ஒன்று. இதில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார். இதன் மூலம் அவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எல்.ஏ.வாக மீண்டும் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் நேற்று அறிவித்தது. இந்த தகவல் கடிதம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை எடுத்து இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மூன்றாவது முறையாக வாக்களிக்க உள்ளனர்.