போதை பொருள் பறிமுதல்
ரூ.35 லட்சம் மதிப்பிலான 50 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல்
ஈரோடு வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து அதிக அளவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து செல்கின்றன. சமீபகாலமாக ஈரோடு வழியாக வரும் ரெயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார், ஈரோடு ரெயில்வே போலீசார் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையம் அருகே ஹெராயின் கடத்தப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் துளசி மணி தலைமையிலான போலீசார் ஈரோடு ரெயில் நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சந்தேகப்படும்படியாக இரண்டு வட மாநில வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹாசானுஜமால்(32), ஹசாதுல் இஸ்லாம்(29) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த பாக்சை திறந்து பார்த்தபோது அதில் 50 கிராம் ஹெராயின் போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் இருக்கும். இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அசாம் மாநிலத்தில் இருந்து ஹெராயினை கடத்தி வந்து விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் மதுவிலக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கடத்தல் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் நிலையம் அருகே 50 கிராம் ஹெராயின் போதை பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.