அடையாளம் தெரியாத மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி
பாலியல் ரீதியாக துன்புறுத்தி படுகொலை செய்த கொத்தனார் கைது
நாகை மாவட்டம் முப்பத்திக்கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (27). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, திருப்பூண்டி கடைத் தெருவில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். திருப்பூண்டி பேருந்து நிறுத்தத்தில், மனநிலை பாதிக்கப்பட்ட 65 வயது மூதாட்டி ஒருவர் சுற்றிக் கொண்டிருப்பதை ராமன் நாள்தோறும் பார்த்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 -ம் தேதி இரவு திருப்பூண்டி பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற ராமன், உறங்கி கொண்டிருந்த அந்த மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி, ராமனிடம் சண்டையிடவே, அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து, மூதாட்டியின் பின் மண்டையில் அடித்துள்ளார். பின்னர், மயக்கமடைந்த மூதாட்டியை தரதரவென இழுத்துச் சென்று, அருகில் உள்ள கருவேலங்காட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அப்போது இளைஞரை தள்ளி விட்டு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்ததால், முகம் உள்ளிட்ட இடங்களில் கடுமையாக தனது கையால் தாக்கி நிலைகுலைய வைத்துள்ளார். பின்னர் மயக்கமடைந்த மூதாட்டியை, நல்லவன்போல நாடகமாடிய ராமன், 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டு மூதாட்டி ஒருவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து விட்டு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள், ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர், விபத்து ஏற்படவில்லை என்றும், மூதாட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கீழையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இளைஞர் ஒருவர் மூதாட்டியிடம் சில்மிஷம் செய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். இளைஞர் ஒருவர் மூதாட்டியை அடித்து இழுத்து செல்வது கேமராவில் பதிவாகி இருப்பதை போலீசார் பார்த்தனர். பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தது முப்பத்திக்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த ராமன் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மகிழி பாலத்தின் அருகே ராமன் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், அவரை கைது செய்ய விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் ராமன் தப்பி ஓட முயற்சி செய்தார். உடனே தனிப்படை போலீசார் அவரை விரட்டி சென்றனர். தப்பு ஓடிய ராமன் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். அதில், ராமனின் இடது கால் எலும்பு முறிந்தது. உடனே தனிப்படை போலீசார், உரிய சிகிச்சைக்கு பின், ராமனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். படுகொலை செய்யப்பட்ட மூதாட்டியின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் தெரியாததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாகை அருகே 65 வயதான மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.