வரத்து அதிகரிப்பால் கொத்தவரை விலை சரிவு

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் கொத்தவரை விலை சரிவு: சாகுபடி செய்த விவசாயிகள் கவலை;

Update: 2025-04-02 19:30 GMT
வரத்து அதிகரிப்பால் கொத்தவரை விலை சரிவு
  • whatsapp icon
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் கொத்தவரங்காய் கொள்முதல் விலை குறைந்துள்ளது. இதனால், சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை, இந்த மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவற்றை சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் வாங்கி வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர். இந்நிலையில், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உள்ள கொத்தயம், கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, இடையகோட்டை, மண்டவாடி, வடகாடு பகுதிகளில் கொத்தவரங்காய் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். பயிர் விளைந்து கொத்தவரங்காய் பறிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து கொள்முதல் விலை குறைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கும், கேரளா மாநிலத்திற்கும் கொத்தவரங்காய் அனுப்பப்படுகிறது. கடந்த மாதம் ரூ.30க்கு கொள்முதல் செய்யப்பட்ட கொத்தவரங்காய் தற்போது ரூ.10க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Similar News