நேரடி விதைப்பு செய்த வயல்களில் தண்ணீர் வராததால் நெல்மணிகள் கருகும் நிலை

சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரும் பணியில் இறங்கிய விவசாயிகள்;

Update: 2025-07-27 12:51 GMT
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த காருகுடி, பெரிய காருகுடி மற்றும் நிலசுத்தி ஆகிய பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடிக்கான நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு, பாசன நீரானது வாரத்திற்கு ஒருமுறை (ஞாயிற்றுக்கிழமை) மட்டுமே பாசனம் பங்கிட்டு வழங்கப்படுகிறது. வெள்ளையாற்றிலிருந்து கொடியாலத்தூர் பாசன வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும்  பழைய சர்வோதய வாய்க்காலுக்கு முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை. கடந்த 1993 -ம் ஆண்டு  தூர்வாரப்பட்ட வாய்க்கால் அதன்பின் தூர்வாரப்படாததால் முழுமையாக தூர்ந்து போய் பாசன தண்ணீர் பாய்வதற்கு வழியின்றி இருந்தது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், நேரடி விதைப்பு செய்த பெரும்பாலான வயல்களில் நெல்மணிகள் முளைக்காமலும், முளைத்த நெல்மணிகள் கருகும் நிலையில் உள்ளது. எனவே, விவசாயிகளே சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரும் பணியில் இறங்கி உள்ளனர். விவசாயிகள் சுமார் 50 ஆயிரம் நிதி திரட்டி வாய்க்காலை மனித ஆட்கள் கொண்டு மண்வெட்டியால் தூர்வாரி, வாய்க்காலில் மண்டியுள்ள தேவையற்ற செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 3 கிமீ தூரமுடைய பாசன வாய்க்காலை தூர்வாரினாலும் கூட, மேடான பகுதியாக இருப்பதால் போதிய அளவு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது‌‌. மேலும். பாசன நீரை பங்கிட்டு வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர். எனவே, உரிய ஆய்வு செய்து தங்கள் பகுதிக்கு தேவையான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News