தெருநாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரை விடும் பொதுமக்கள்
தெருநாய்களை பிடித்து அடைக்க நகராட்சிகளுக்கு உத்தரவிட கோரிக்கை;
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க தலைவர் என்.பி.பாஸ்கரன், நாகை மாவட்ட ஆட்சியர், நாகை நகராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது. நாகப்பட்டினம் நகரத்தில் உள்ள 36 வார்டுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் தெருக்களில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இதில் பல நாய்கள் நோய்வாய்ப்பட்டும், வெறிபிடித்தும் காணப்படுகின்றன. இதனால், சாலையில் செல்லும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், தாய்மார்களை வெறிநாய்கள் எவ்வித காரணமும் இன்றி விரட்டி விரட்டி கடித்து காயப்படுத்தி விடுகின்றன. நாய்கள் கடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போய் உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள மாநிலத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நாய்கள் கடித்து பாதிக்கப்பட்டுள்ளனர்என ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விலங்கு நல அமைப்புகள் நாய்களை கொல்ல கூடாது என்றும், நாய்களின் நோய்களுக்கு ஏற்ற மருந்துகளை செலுத்தி அவற்றின் வெறித்தன்மையை குணமாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது, தமிழ்நாடு அரசு நாய்களுக்கு தடுப்பூசி போட உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இது சரியான நடவடிக்கை இல்லை. தெரு நாய்களை பிடித்து அடைக்க வேண்டும். அப்போதுதான், தெரு நாய்கள் இல்லாமல் தெருக்கள் இருக்க முடியும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.மேலும், தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும் போது, தடுக்கும் அமைப்பு யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்னர். எந்த அமைப்பாவது தடுக்க நினைத்தால், அவர்கள் வீட்டில் நோய்வாய்ப்பட்ட வெறிப் பிடித்த நாய்களை வைத்து கொள்வார்களா என கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும், தெரு நாய்களை பிடித்து அடைக்க நகராட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.