காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை;
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநில செயலாளர் மா.பிரகாஷ், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்கு கொண்டு வரப்பட்ட காப்பீடு திட்டம், தற்போது தனியார் நிறுவனத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. விவசாயிகளிடமிருந்து 500 ரூபாயும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.14,500 ஆக மொத்தம் ரூ.15 ஆயிரம் பிரீமியம் செலுத்தப்படுகிறது. இதனை பெற்றுக் கொண்டு தனியார் நிறுவனம் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட வழங்காமலும், 100 ரூபாய், ஆயிரம் ரூபாய் என கொடுத்து விவசாயிகளை பாழுங் கிணற்றில் தள்ள பார்க்கிறது. இந்த மோசமான நிலையை தவிர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக, தனியார் காப்பீடு நிறுவனத்திற்கு அரசும், விவசாயிகளும் கொடுத்த தொகையை வசூலிக்க வேண்டும். பின்னர், காப்பீடு நிறுவனத்தை ஏற்று அரசே நடத்த வேண்டும் அல்லது விவசாயிகளுக்காக செலுத்தப்படும் ரூ.14,500 பிரீமியம் தொகையை விவசாயிகளிடமே கொடுத்து விவசாயிகள் நேரடியாக காப்பீடு செய்து கொள்ள வழிவகை செய்தால் விவசாயிகளுக்கான திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்கும். பூச்சி விரட்ட இயற்கை விவசாயிகள் பயன்படுத்தும் மீன் அமிலம் மற்றும் இடுபொருட்களை பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கு, நானோ யூரியா, நானோ டிஏபி ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்தியது போல, இவ்வாண்டே மாபெரும் உணவு திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.