மயிலாடுதுறை மாவட்ட மாதிரி பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டை ஊராட்சியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் மாவட்ட அரசு மாதிரி பள்ளிகள் முதல் கட்டமாக 2021-2022 ஆம் கல்வியாண்டில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் ஆரம்பிக்கபட்டது.
இதுபோன்ற மாவட்ட மாதிரி பள்ளிகளில் பயின்ற 275 மாணவர்கள் ஐஐடி, அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தைவான் போன்ற நாடுகளிலும் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இரண்டாம் கட்டமாக 2022-2023 ஆம் கல்வியாண்டில் 15 மாவட்டங்களுக்கும் மூன்றாம் கட்டமாக 2023-2024 இந்த கல்வி ஆண்டில் மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 38 மாவட்டங்களிலும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செயல்படுகிறது. இதுபோன்ற மாவட்ட மாதிரி பள்ளிகளை நிறுவுவதற்கான முக்கிய நோக்கம் ஒவ்வொரு மாணவரும் அறிவியல், தொழில்நுட்பம் பொறியியல் கலை மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் படிப்பைத் தொடர முதன்மை நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும் பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஸ்மார்ட் போர்டு பயன்படுத்தப்படுகிறது.
இப்பள்ளியானது உண்டு உறைவிட பள்ளியாகும் மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டை அரசு மாதிரிப் பள்ளியில் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு என மொத்தமாக இப்பள்ளியில் மாணவிகள் 90-ம், மாணவர்கள் 86 பேரும் உள்ளனர். மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 176 பேர் பயின்று வருகின்றனர்.
இந்த அரசு மாதிரி பள்ளியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் குடிநீர், கழிவறை, வகுப்பறைகளை ஆய்வு செய்து வகுப்பறைகளை சுகாதாரமாகவும், கழிவறைகளை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்.